Tuesday 28 July 2015

TNA Election manifesto August 2015 (தமிழ்)

கூட்டமைப்பின் 2015 ஓகஸ்ற் பொதுத் தேர்தல் அறிக்கை:

அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இச் செயற்பாட்டை எதிர்த்தனால் ஏற்பட்ட அரசியல் எழுச்சி காரணமாக 1949 டிசம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றது. இச் சமகாலத்திலேயே அரச ஆதரவுடன் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றும் திட்டங்கள் தீவிரமடைந்தன.

இந்தப் பின்னணியில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்கள் என்பதால் தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனமெனவும், அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்’ என்கின்ற தனது அரசியற் கோட்பாட்டினை முன்வைத்தது. இந்த உரிமையை செயற்படுத்தவென தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கில் கூட்டாட்சி அடிப்படையிலான தன்னாட்சி ஏற்பாடு ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிநின்றது.

இந்தக் காலப்பகுதியிலிருந்து 1970 வரையிலான கால இடைவெளியில் முதலில் அந்நிய ஆக்கிரமிப்பினாலும் பின்னர் பெரும்பான்மை ஆதிக்கத்தினை வலுப்படுத்திய அரச அமைப்பினாலும் நாம் இழந்த எமது இறைமையினை மீட்டெடுக்க அறவழிப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.

மொழி மற்றும் கலாச்சாரத் தனித்துவ அடையாளங்களைப் பேணவென அன்று தமிழ் மக்களின் தலைவராக விளங்கிய தந்தை செல்வா அவர்களால் முறையே 1957 மற்றும் 1965களில் பிரதம மந்திரிகளான எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க என்பவர்களுடன் வடக்கு-கிழக்கில் உள்ள அரச காணிகளைப் பாரதீனப்படுத்தலைப் பிரதான அம்சமாகக் கொண்ட ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களுமே அன்றைய அரசாங்கங்களால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன.

1961 இல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வடக்கு-கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களை இணைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. மக்கள் அமைதியான முறையில் கச்சேரி வாசல்களை வழிமறித்து மத வழிபாட்டிலும், போராட்டத்திலும் ஈடுபட்டமை வடக்கு-கிழக்கில் அரச கருமங்களை முற்றிலும் இயங்கா நிலைக்கு உள்ளாக்கியது.

1970 இல் இலங்கைக்கான சுதேசிய அரசியலமைப்பொன்றை நிறுவும் முகமாக அரசியலமைப்புப் பேரவை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்தச் செயன்முறையில் தமிழரசுக் கட்சியும் பங்குபற்றியதோடு தமிழ் பேசும் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பிற்கமைய ஒன்றுபட்ட நாட்டிற்குள் பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது.

இவ் ஆலோசனைகள் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அரசியல் அமைப்புப் பேரவையிலிருந்து வெளியேறினர். இதே போன்று 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பிற்கும் தமிழ் மக்கள் தமது சம்மதத்தினை வழங்கவில்லை. முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்புக்கள் இரண்டுமே ஒற்றையாட்சி அரசமைப்பை உறுதிப்படுத்தியதுடன் சிங்கள மொழியினை மாத்திரமே ஒரே அரச கரும மொழியாகக் கொண்டு செயற்படவும் தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கவும் வழிவகுத்தன. இந்த இரு குடியரசு யாப்புக்களும் தமிழ் மக்களின் சம்மதமின்றியே நிறைவேற்றப்பட்டன.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாகிய வடக்கு-கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முனைப்புடன் திட்டமிட்ட அரச ஆதரவுச் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கு-கிழக்கில் இது முழு முனைப்புடன் தொடர்ந்தது. அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் அடக்குமுறையான இராணுவமயமாக்குதல் தொடர்ந்து பேணி வருவதுடன் இராணுவ நோக்கத்திற்கென பெருமளவு காணிகளை அபகரிப்பதிலும் ஈடுபட்டது.

தமிழ் இளைஞர்களின் உயர் கல்வியைப் பாதித்த தரப்படுத்தல் மற்றும் அரச துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதில் காட்டிய வெளிப்படையான பாரபட்சம் என்பவற்றுடன் 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அரசு எவ்வித பாதுகாப்பையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கவில்லை.

இச் சந்தர்ப்பங்களில் நாட்டின் ஏனைய பாகங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலம், கடல் மற்றும் வான் வழியாக வடக்குக் கிழக்கிற்கு அன்றைய அரசாங்கங்களினால் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் இவ்விரு மாகாணங்களையும் தமிழர் தம் தாயகமாகவும் அங்குதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு உண்டு எனவும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.

அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள்

1983 ஆம் ஆண்டு தமிழருக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையினைத் தொடர்ந்து, தமிழ் பேசும் மக்களுக்குப் பெருமளவு தன்னாட்சி அதிகாரத்தினை வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டின் மூலம் தமிழரின் தேசியப் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1987 இல் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதி உயர்மட்டக் கலந்துரையாடல்களில் அதிகாரப்பகிர்வு விருத்தி செய்யப்படுமென்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.

தேசியப் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஏனைய முயற்சிகள், 1993 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்திலே மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் தீர்வாலோசனைகள், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் கீழ் 1995, 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்த ஆலோசனைகள, அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2006 டிசம்பரில் சர்வ கட்சி பல்லின வல்லுனர் குழுவின் பெரும்பான்மை அறிக்கை ஆகியவற்றிற்கு இட்டுச் சென்றன.

எரியும் தேசியப் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் அரங்கில் எதுவித முன்னேற்றமும் ஏற்படாதிருந்த காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுத்தது. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. 2002 பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளும் அன்றைய இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதோடு, 2002 டிசம்பரில் ஏற்பட்ட ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் கண்டன. அக் கோட்பாடு பின்வருமாறு அமைந்தது.

‚ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்‛ .

 இராணுவத் தாக்குதலும் அதன் பின் விளைவுகளும்

இருப்பினும், இந்த யுத்த நிறுத்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே மீண்டும் மூண்ட இராணுவ மோதல்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்று முடிவுக்கு வந்தது. 30 வருட காலமாக நடந்த இந்தக் கொடூர யுத்தம் வடக்கையும் கிழக்கையும் பேரழிவிற்கு உள்ளாக்கியதோடு, தமிழ் மக்களையும் கதியற்றவர்களாக்கியது. பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத் தேடி வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும், ஐந்து இலட்சம் தமிழர்கள் நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டனர்.

ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளதுடன், நம்பத்தகுந்த கணக்கெடுப்புக்களின் படி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போரின் இறுதிக்கட்டங்களில் கொல்லப்பட்டனர். இதற்கும் மேலாகப் பல்லாயிரக் கணக்கானோரது அவயவங்கள் பாதிக்கப்பட்டதும், மோசமான காயங்களுக்குள்ளானதும், உள அழுத்தங்களுக்கும், உளவியல் பிரச்சினைகளுக்கும் ஆளானதும் நாமறிந்த யதார்த்தம்.

ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழர் தமது வசிப்பிடங்களை இழந்தனர். இவர்களில் பலர் எல்லா சர்வதேச நியமங்களுக்கும், நாகரிக நடைமுறைமைகளுக்கும் எதிராக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இம் மக்கள் தமது பூர்வீக இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என சர்வதேச சமூகத்திற்கும், ஐக்கிய நாடுகளுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் இந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் மக்களும் இன்றிருக்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகளும்சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் பிரகாரமும் தமிழர்களாகிய நாங்கள் தனிச் சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். ஒரு மக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும், நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகின்றோம்.

இதனால், தனித்துவமான மக்களாகவும், தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும், எமக்குரிய எமது ஒருமித்த உரிமைகள் தொடர்பிலும், மேலும் எமது தலைவிதியை அல்லது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பதற்கு எமக்கிருக்கும் உரிமை தொடர்பிலும், அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டதும், பிளவுபடாததுமான இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கு-கிழக்கில் தக்க தன்னாட்சி முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றோம்.

இவை தொடர்பிலான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் பொருத்தமற்றதாகவும், திருப்தியற்றதாகவும் அமைந்துள்ளன. தற்போதுள்ள ஏற்பாடுகள் பெரும்பான்மை மக்களுக்குச் சார்பானதாகவும், அவர்களது ஆதிக்கத்தை தமிழர் மீது திணிக்கும் வகையிலுமே அமைந்துள்ளன. நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் ஓர் அரசியலமைப்புக் கட்டமைப்பின்றி பல்லின சமூகமொன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது. இந்த பின்புலத்திலேயே நாம் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றோம்.

இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு, அரசிடம் அல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக வலியுறுத்துகின்றது. தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடமல்ல, தமிழ் மக்களிடமே பொதிந்திருக்கின்றது. இதனடிப்படையில், மத்திய அரசிடமும் அதன் முகவரான ஆளுநரிடமும் அதிகாரங்களைக் குவிக்கின்ற 13 ஆம் திருத்தச் சட்டம் முற்றிலும் பிழையானதொன்று. ஏதேச்சாதிகார அரசிற்கு விடுக்கும் அடிப்படை ஜனநாயகச் சவாலின் மீதே எமது அரசியல் சித்தாந்தம் வேரூன்றி நிற்கின்றது.

இந்த நோக்கம் நாடளாவிய ரீதியில் செயற்படுவதற்கென நாம் கடந்த ஜனவரி 8 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது மாபெரும் பங்களிப்பை வழங்கியிருந்தோம். ஆகவே, எமது அரசியலானது அனைத்து மக்களதும் தேவைகள் மற்றும் அரசியலபிலாசைகளோடும் தமிழ் பேசும் மக்களது நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்துடனும் பின்னிப்பிணைந்துள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அத்தியாவசியமெனக் கருதும் கோட்பாடுகளும், பிரத்தியேக அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத்தீவில் வாழும் பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்களைப் பங்கிடுவதனூடாகப் பகிர்ந்த இறையாண்மையினை உறுதிப்படுத்தலைக் குறித்தது. உண்மையான நல்லிணக்கத்தையும், நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும், இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான அபிவிருத்தியையும் எய்துவதற்குப் பின்வரும் அதிகாரப் பங்கீட்டு அடிப்படைகள் முக்கியம் பெறுகின்றன.

தமிழர்கள் தமக்கேயுரிய நாகரிகம், மொழி, கலாசாரம், மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமிக்க தேசிய இனமாவர். அத்துடன் தொன்று தொட்டே சிங்கள மக்களுடனும் ஏனைய மக்களுடனும் இந்தத் தீவில் வாழ்ந்து வருகின்றனர்.
புவியியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதும், தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுமான வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களதும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களதும் பூர்வீக வாழ்விடங்களாகும்.
இலங்கை நாடு ஏற்றுக்கொண்டு, கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் குடியியலுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சாசனத்திலும், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சாசனத்திலும் அடங்கியிருக்கும் விதிகளின் பிரகாரம் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.
முன்னர் இருந்தவாறு ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளினதும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள். இது வடக்கு-கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம்.
பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடானது நிலத்தின் மீதும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டம்-ஒழுங்கு, சட்ட அமுலாக்கம் என்பவற்றின் மீதும், சமூக பொருளாதார அபிவிருத்தயின் அங்கங்களான சுகாதாரம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, பண்பாட்டுத்துறை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து வளங்களை திரட்டிக்கொள்ளல் மற்றும் நிதி அதிகாரம் என்பவற்றின் மீதானதாகவும் இருக்க வேண்டும்.
வடக்கு- கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மூலம் புதிய கைத்தொழிற் துறைகளும் வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படல் வேண்டும்
தேசிய பல்கலைக்கழகங்களிற்கு அனுமதி பெறாதோர் தமக்கு உகந்த துறைகளில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மாற்று வழிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும்
மேற்குறித்த யாவும் ஒன்றுபட்டதும் பிளவுறாததுமான இலங்கைக்குள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எமது நிலைப்பாடு

உண்மையானதும் நிலையானதுமான சமாதானத்திற்கு பொறுப்புக்கூறலும், நல்லிணக்கமும் இன்றியமையாதவை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் மார்ச் 2012, மார்ச் 2013, மார்ச் 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளதும், மார்ச் 2014 இன் தீர்மானத்தால் அங்கீகாரம் பெற்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையினது பரிந்துரைகளதும் முழுமையான நடைமுறையாக்கலை நாம் வலியுறுத்துகின்றோம்.

உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதிலும், அது இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கு உறுதியான அர்ப்பணிப்புண்டு. உண்மை, நீதி, பரிகாரம் மற்றும் மீள்-நிகழாமைக்கான உறுதி என்பன இலங்கையின் தேசியப் இனப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படுவதற்கும், இலங்கை வாழ் பல்வேறு மக்களுக்கிடையே நீதி, சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் தோன்றும் நிரந்தரமானதும், உண்மையானதுமான நல்லிணக்கம் நிலைப்பதற்கும் அத்தியாவசியமானவை.

தமிழ் மக்களது உடனடிப் பிரச்சினைகள்

நாம் நீதியானதும் நிலையானதுமான அரசியல் தீர்வொன்றைக் காண தொடர்ந்து முயற்சிக்கும் அதே வேளை எமது மக்களது உடனடித் தேவைகளைச் சந்திப்பதிலும் முனைப்புடன் ஈடுபடுவோம். குறிப்பான சில விடயங்கள் இங்கு பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கிலும் கிழக்கிலும் அர்த்தமுள்ள இராணுவக் குறைப்பிற்கு ஆதாரமாக ஆயுதப்படைகள், இராணுவச் சாதனங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்பன அகற்றப்பட வேண்டும். இது இன்று நிலவும் அமைதிச்சூழலில் இன்றியமையாததாகும்.

வடக்கிலும்- கிழக்கிலும் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் விரைவாகத் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும். இவர்களுக்கான வீடுகளும், வாழ்வாதரங்களும் இவர்களது கௌரவம் குன்றா வண்ணம் மீளமைக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது அயராத உழைப்பின் விளைவாக ஜனவரி மாதம் 2015 இல் முன்னைய அரசு தோற்கடிக்கப்பட்டதன் பின்பு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் வடக்கில் வலிகாமத்திலிருந்தும், கிழக்கில் சம்பூரிலிருந்தும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு அவர்களது காணிகளை மீளக் கையளிப்பதற்கும், அவர்களை மீளக் குடியமர்த்துவதற்குமான தீர்மானம் எடுக்கப்பட்டு, இன்று அது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தக் விடயங்கள் முற்றாக நிறைவேறும் வரை எமது முயற்சிகள் தொடரும். மேலும், எமது முயற்சியால் முல்லைத்தீவு கேப்பாபிலவில் ஆயிரம் ஏக்கர் நெற்காணி அவற்றிற்கு உரித்தான மக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்டதனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும், போருடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களின் பெயரில் சிறையிலிருக்கும் மற்றைய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

உண்மையைக் கண்டறிவதனூடாக இன்று வரை நீடிக்கும் காணாமற்போனோர் விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். தமது வாழ்வாதாரமாக இருந்த குடும்பத்தலைவர்களையும் பிள்ளைகளையும் இழந்த காணாமற்போனோர் குடும்பங்கள் துயரங்களைக் கையாளவும், அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதற்குமான பன்முகப்படுத்தப்பட்ட விமோசனத் திட்டங்கள் அவர்களுக்குக் கிட்ட வேண்டும்.

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்படுவதோடு, திரும்பத்தக்கதான சூழலும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் மீள்வருகைக்கும், மீள்குடியேற்றத்திற்குமான திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் அடங்கலாக வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்ச்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும், புலம்பெயர் தமிழர்களதும், சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த அரசின் எதிர்மனப்பாங்கும், ஜனவரித் தேர்தலின் பின்னரான அரசின் உறுதிப்பாடற்ற யதார்த்தமும் இதுவரை மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான அவகாசத்தை வழங்கவில்லை. இப் பொதுத் தேர்தலின் பின்னர் உருவாகும் அரசின் கீழ் இந் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கும்.

எமது மக்களின் விவசாயத்திற்கு அவசியமான நீர்த் தேவை மற்றும் குடிநீர்த் தேவை என்பவற்றைப் பூர்த்தி செய்யும் பொருட்டும் வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்து சிறு குளங்களையும் புனர் நிர்மானம் செய்யும் திட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். மேலும் வடக்கில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையினைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்ற வல்லுனர்களின் உதவியுடன் ஆவன செய்யும்.

பலாலி விமானத்துறையை சர்வதேச விமான நிலையமாக மாற்றுதல்,

வடக்கு கிழக்கில்; உள்ள துறைமுகங்களையும் மற்றும் மீன்பிடித்துறைமுகங்களையும்; அபிவிருத்தி செய்தல் என்பன உள்ளடங்கலான பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும்

எமது பனைவளத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவி பெறப்படும்.
எமது மீனவர்கள் தமது தொழிலில் சுயாதீனமாக ஈடுபடுவதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வுகள் காணப்படுவதுடன் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான பொருத்தமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும்

போரினால் விதவையாக்கப்பட்டோர் அநாதைக் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் அங்கவீனர்கள்வடக்கு கிழக்கில் ஆதரவின்றியிருக்கும் 90,000 இற்கும் அதிகமான விதவைகள் போர் விட்டுச் சென்ற ஆழ்ந்த வடுக்களாய் வாடுகின்றனர். அவர்களது ஆளுமையினை விருத்தி செய்து அவர்களது வாழ்க்கையினை மேம்படுத்த தெளிவானதொரு திட்டம் அவசியம். எம் விதவைகள் இன்று பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பலத்த இன்னல்களிற்கு முகம் கொடுக்கின்றனர். இவர்களது வாழ்வாதாரத் தேவைகளை சீர்செய்யும் திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்தி இவர்களது இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்படுவது அவசியம். குழந்தைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோரதும் தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு

முன்னாள் போராளிகளிக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுத் திட்டங்கள் அவர்கள் தமது வாழ்க்கையை சுயகௌரவத்துடன் மீள ஆரம்பிக்கத்தக்க தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பன அடங்கிய பூரணத்துவமிக்க திட்டங்களாக இருக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் இதுவரை நடைமுறையில் உள்ள திட்டங்கள் தம்மகத்தே பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. போராளிகளால் தமது வாழ்க்கையை மீண்டும் தொடங்கவோ, வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளவோ முடியாத நிலையே தொடர்வதால், இது குறித்த உடனடி வேலைத்திட்டம் அவசியம்.

மரபுவழிச் சமூக் கட்டமைப்புக்களின் சிதைவு

தமிழர்களை அர்த்தமுள்ள ஆட்சிப் பங்களிப்பிலிருந்து ஒதுக்கிவைத்து, அதற்குப்பதிலாக இராணுவத்தைப் பயன்படுத்தும் இன்றைய யதார்த்தத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தலைவிரித்தாடும் சூழலும், இளைஞர்கள் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலைமையும் தோற்று விக்கப்பட்டிருப்பதுடன், மரபுவழிச் சமூக கட்டமைப்புக்களின் சிதைவிற்கும் வழிவகுத்துள்ளது. இதனைத் தீர்க்கும் ஒரே வழி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆட்சி அதிகாரங்களைப் பங்கிடுவதேயாகும்.

சர்வதேச சமூகத்தின் வகிபாகம்

தமிழ் மக்கள் உள்ளுர் பொறிமுறைகளினூடாகத் தமது தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமானதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடனே இருந்து வந்துள்ளனர். இலங்கை அரசே கிட்டிய சந்தர்ப்பங்களையெல்லாம் உதறித் தள்ளியது மட்டுமல்லாது தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர் மீது இனஅழிப்பைக் கட்டவிழ்ப்பதனூடாக அடக்கியாளவும் தலைப்பட்டது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாடே தேசிய இனப் பிரச்சினையை சர்வதேச மயமாக்கியதோடு சர்வதேச வகிபாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் இலங்கை அரசிற்கு ஏற்படுத்தியது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாட்டின் தவிர்க்க முடியா விளைவான ஆயுதப் போராட்டம் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசு சர்வதேச தலையீட்டின் மூலம் விளைந்த சிறிதளவான நன்மைகளையும் களையத் துடித்தது. இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையே நிரந்தரமானதும், நிலையானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அனைவரும் சமத்துவமுள்ள குடிமக்களாக வாழ வழிசெய்ய சர்வதேச வகிபாகம் தொடர்வது அத்தியாவசியமானது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

முடிவுரை

யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் வாழும் வாக்காளர் யாவரும் ஒன்றுபட்டு, முழுமையாக தமது வாக்குகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்ற பெயரிலும், வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து, தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த விஞ்ஞாபனத்தில் முன் மொழியப்பட்டிருக்கும் செயற்றிட்டங்களுக்கு தங்கள் ஜனநாயக ஆணையினை பூரணமாக வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்புடன் வேண்டி நிற்கின்றது.

இத் தேர்தல் அறிக்கையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்படுகிறது.

No comments: